தலவரலாறு

ஓம்சக்தி பராசக்தி
கி.பி. 16 ஆம் நூற்றாண்டில், மதுரை மாநகரம் முகலாயர்களின் கொடுங்கோல் ஆட்சியால் ஆளப்பட்டது. மக்கள் மிகுந்த துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளானார்கள். அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் முகலாயர்களின் மேலாண்மையும், சுரண்டலும் நிறைந்திருந்தது. பசுமையான வயல்வெளிகள் அனைத்தும் வறண்ட நிலங்களாக மாறி மக்களின் வாழ்வாதாரத்திக்கு கேள்விக்குறியாகியது. மதுரை தன் செல்வாக்கையும் பொலிவையும் இழந்துகொண்டியிருந்தது.
பொதுவெளிகளிலும் ஆட்சியாளர்களின் மன்றங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் எங்கும் மக்கள் தங்கள் துயரங்களை பகிர்ந்துகொள்ள கிருஷ்ணதேவராயர் செவிகளுக்கு வந்தடைந்தது. மன்னர் அரசவையை கூட்டி அனைத்து பிரதேச அமைச்சர்களுடன் மதுரையை மீட்டெடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த அமைச்சர்கள், மதுரையை மீட்பது தொடர்பான பல்வேறு யோசனைகளை முன்மொழிந்தனர். ஒவ்வொருவரும் தங்களின் அணுகுமுறைகளை பகிர்ந்தனர். சிலர் போர்த் திட்டங்களை, சிலர் அரசியல் வியூகங்களை முன்மொழிந்தனர்.
அப்போது, விஸ்வநாத நாயக்கர், மதுரையை முகலாயர்களின் கொடுங்கோளிலிருந்து மீட்பதற்கு தாம் முன்னிலையில் போரில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர் ஒரு தைரியசாலி போராளி மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலியும் கூட. கிருஷ்ணதேவராயர் இதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
விஸ்வநாத நாயக்கரின் போர்த் திறமைகளை பயன்படுத்தி வெற்றி பெறுவது குறித்து மேலும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் ஒருமனதாக விஸ்வநாதநாயக்கர் தலைமையில் போர் செய்வதுயென்று முடிவெடுக்கப்பட்டது. விஸ்வநாதநாயக்கரை பற்றியும் அவரது படைகளை பற்றியும் அதில் சிறந்த முதலூர் வம்ச படை வீரர்கள் பற்றியும் அவர்களின் திறமை வீரத்தை பற்றியும் விவாதித்து போருக்கான உத்திகளையும் விவாதித்து ஒருமனதாக முடிவுசெய்தனர்.
அதே சமயத்தில் முதலூரில் நமது முன்னோர்கள் நமது குலதெய்வமான அங்காளஈஸ்வரிக்கும் காவல் தெய்வமான மசான கருப்பசாமிக்கும் உற்சவவிழா நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது ஊரைநோக்கி தூதுவன் ஒருவன் விஸ்வநாதநாயக்கரின் ஓலையை தலைவரை நோக்கி கொதிண்டிவந்து சேர்த்தான். அதில் விஸ்வநாத நாயக்கர் வருகை பற்றி விவரித்து இருந்தார். குறித்த நாளில் விஸ்வநாதநாயக்கர் முதலூர் வந்தடைந்தார். மக்கள் அவரை வரவேற்று உபசரித்து , கோயில் மண்டபத்தில் வைத்து அவரது வருகைக்கான நோக்கத்தை பற்றி பேசிக்கொண்டனர்.
விஸ்வநாதநாயக்கர் மதுரை மக்களின் துன்பத்தை பற்றியும் முகலாயர்களின் கொடுங்கோல் ஆட்சியை பற்றியும் முதலூர் மக்களிடம் கூறி வேதனை கொண்டார். அதன் பிறகு மன்னரின் விருப்பத்தையும் தனது ஆலேசனைப்பற்றியும் அரசவையில் நடந்ததை பற்றியும் பகிர்ந்துகொண்டார். விஸ்வநாதநாயக்கர் போரில் முதலூர் வீரர்களின் முக்கியத்துவத்தையும் தனது எதிர்பார்ப்பையும் எடுத்துக்கூறினார். முதலூர் மக்களின் ஆதரவையும் ஆசியையும் கோரினார். பின்னர் இதுகுறித்து அம்மாவிடம் குறிகேட்கப்பட்டு போரில் கலந்துகொள்வதென்று முடிவுசெய்யப்பட்டது.
முதலூர் வீரர்கள் அம்மனின் ஆசியுடன் போர்க்களம் அடைந்து அம்மனின் அருளால் பல நாட்கள் போராடி முகலாயர்களை போரில் வென்று மதுரையை மீட்டனர்.
முகலாயர்களை மதுரையில் இருந்து விரட்டிய பின்னர், விஸ்வநாத நாயக்கர் முதல் நாயக்கர் ஆட்சியை நிறுவினார். போரில் வீரமாக போராடிய முதலூர் வீரர்களுக்கு தாராபுரத்தில் ஆட்சியமைக்கும் அதிகாரத்தையும், கப்பம் வாங்கும் அதிகாரத்தையும் வழங்கினார். முதலூர் மக்கள் அவ்வாறு தாராபுரத்தில் குடியேறி, அங்கே சிறப்பாகவும், செம்மையாகவும் ஆட்சி செய்தனர்.
இந்த நிகழ்வுகள் மதுரையில் மட்டுமின்றி, அனைத்து தென் இந்தியாவிலும், மக்கள் ஒற்றுமையாக போராடினால், எவ்விதமான கொடுங்கோல் ஆட்சியையும் முடித்து விடலாம் என்பதை உணர்த்தியது. முதல் ஊர் வீரர்களின் தைரியம் மற்றும் பக்தி இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
தாராபுரத்தில் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த முதல்வர் வம்சத்தைச் சேர்ந்த மக்களுக்கு, அன்னை அங்காள ஈஸ்வரியின் அருளும், அவர்களின் காவல் தெய்வமான ஸ்ரீ மாசான கருப்பசாமியின் அருளும் பரிபூரணமாக இருந்தது. இதற்கு சாட்சியாக, ஒரு மிக முக்கியமான சம்பவத்தை நினைவுகூர்கிறோம்.
ஒரு இரவு, முதல்வர் வம்சத்தின் தலைமகன் கனவில் அன்னை அங்காள ஈஸ்வரியை காண்ந்தார். அன்னை தனது தெய்வீக ஒளியில் தோன்றி, “மகனே, இங்கு ஒரு பேரிடர் நிலை ஏற்படப் போகிறது. இயற்கை சீற்றம் மிகுந்த சோதனைக்காலமாக இருக்கப் போகிறது. அதனால், நீ உன் குடும்பத்தாருடன் இங்கிருந்து கிளம்பி மேற்கு திசை நோக்கி செல்லவேண்டும்,” என்று அறிவுறுத்தினாள். மேலும், “அங்கு நீங்கள் எங்கு குடியேற்றப்பட வேண்டும் என்பதற்கான சாமிக்கல் உத்தரவு வரும். அதுவரை, நீங்கள் இங்குள்ள அம்மனையும், அய்யாவும், உங்கள் 21 பந்தி தெய்வங்களையும், 64 சேனைக்கட்டு சாமிகளையும் பிடி மண் எடுத்து, மேற்கு நோக்கி பயணிக்க வேண்டும்,” என்று கூறினாள்.கனவின் நிஜமாம் உண்மை
அந்த கனவின் உண்மைத்தன்மையை உறுதி செய்யத் தலைவன் பல விஷயங்களைக் கவனித்தார். அறையில் சந்தன காற்றும், மல்லிகை பூவின் மணமும் வீசியது. அவரது வீட்டின் பூஜையறையில் இருந்த அங்காளம்மன் மற்றும் மாசான கருப்பசாமியின் விளக்கொளி பிரகாசமாக வெளிச்சிட்டது. இதனால், அன்னை அங்காள ஈஸ்வரியின் தெய்வீக உத்தரவை உறுதிசெய்தார்.
மறுநாள் காலை, தலைவன் தனது ஆறு சகோதரர்களையும் அழைத்து, கனவின் விபரங்களை மற்றும் அம்மனின் உத்தரவையும் விளக்கினார். “நாம் அனைவரும் உடனே இங்கிருந்து புறப்பட வேண்டியது அவசியம். அம்மனின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்,” என்று உறுதியாகக் கூறினார். சகோதரர்களும் உடனே அவருடன் உடன்பட்டு, “அம்மாவின் உத்தரவுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று தெரிவித்தனர்.
அனைவரும் தாராபுரம் அங்காளஈஸ்வரி கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து மதுரையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். காடு மலைகளை கடந்து வாலாந்தூர் வந்தனடைந்தனர். அங்கு இரவு களைப்பாறி மறுநாள் பயணம் மேற்கொள்வதென்று முடிவுசெய்தனர். அங்குள்ள மக்கள் தாமாக முன்வந்து இவர்களுக்கு களைப்பாற ஏற்பாடுசெய்து உபசரித்தனர். அப்போது அவர்களின் பயணத்தின் நோக்கத்தை கேட்டறிந்தனர் மறுநாள் அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது பிடிமண்ணின் சிறு பகுதி சிந்தியது. அதை கவனித்த அந்த ஊர்மக்களில் ஒருவர் சிந்திய பிடிமண்ணை மூலமாக வைத்து தாம் இந்த ஊரில் அம்மனுக்கு ஆலயம் எழுப்புவதாக கூறினார்.
அதை தொடர்ந்து சகோதரர்கள் அனைவரும் வாலாந்தூரில் இருந்து மேற்குநோக்கி நடைபயணம் மேற்கொண்டனர் முல்லை ஆற்றை அடைந்தவுடன் அங்கு இளைப்பாறலாம் என்று முடிவு செய்தனர் அந்த ஆற்றங்கரை ஓரத்தில் கூடாரம் அமைத்து இளைப்பாறினார். அப்போது அந்த ஆற்றில் நீராடிகொண்டிக்க தங்க பேழை ஒன்று ஆற்றில் மிதந்து வந்தது அதை சகோதரர்கள் சுமந்து வர அதே சமயம் கூடாரத்தில் உள்ள மூத்தவருக்கு அம்மனின் அசரீரி கிழக்கு நோக்கி உள்ள சங்கராபுரம் என்னும் கிராமத்தில் தனக்கு ஸ்தலம் அமைத்து வழிபட்டு வருமாறு உத்தரவு வழங்கினாள்.
அம்மாவின் ஆணைக்கிணங்க முல்லையாற்றிலிருந்து சங்கராபுரம் நோக்கி சந்தோசமாக ஆரவாரத்துடன் வந்தடைந்தனர்.
சங்கராபுரம் வந்தடைந்தவர்கள் அங்கு நமது குலதெய்வமான அங்காளஈஸ்வரிக்கும் காவல் தெய்வமான மசான கருப்பசாமிக்கும் 21 பந்தி தெய்வத்திற்கும் 64 சேனை சாமிகளுக்கும் ஊரின் நடுவிலும் ஊரின் எல்லையிலும் ஆலயம் எழுப்பினர்.
இந்த நிகழ்வில் ஊர்மக்களும் இணைந்து பெருவிழாவாக கொண்டாடிவந்தனர் இதனால் அம்மனின் அருளை பெற்று முன்னோர்களும் இந்த ஊரும் ஊர்மக்களும் எல்லா வளங்களை பெற்று சந்தோசமாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்தார்கள்
மக்கள், தங்கள் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாத்து, தெய்வங்களை மிகவும் பக்தியுடன் வழிபட்டனர். தாராபுரத்தில் இருந்து சங்கராபுரம் வருகையின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்து, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தெய்வத்தின் அருளை பெற்றனர்.
இந்த கதையானது, மக்களின் பக்தி, ஒற்றுமை மற்றும் தெய்வத்தின் அருளால் ஏற்படும் நல்லவற்றை வெளிப்படுத்துகிறது. தாராபுரம் முதல் சங்கராபுரம் வரை மக்களின் பயணத்தின் முக்கியத்துவத்தை, தெய்வத்தின் உத்தரவுகளையும், அதற்கு மக்கள் எவ்வாறு தங்களைத் தயார்படுத்தி, தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதையும் விளக்குகிறது.